×

திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: கவர்னர் பன்வாரிலாலை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்

l 7ம் தேதி காலை 9 மணிக்கு எளிமையான விழாவில் முதல்வராக பதவியேற்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார்.  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிப்பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18 தொகுதியிலும், விசிக 4 தொகுதிகளிலும், மதிமுக (உதயசூரியன் சின்னம்) 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் வெற்றி  பெற்றுள்ளது.

 மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதி, தவாக ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெற்றன. திமுக 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. அப்போது,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக அரியணை ஏற உள்ளார்.  இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை 6 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது.

 இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன்  உள்ளிட்ட 125 திமுக எம்எல்ஏக்களும், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 8 கூட்டணி கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 சமூக இடைவெளியுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  முன்மொழிந்தார். அதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். அப்போது கை தட்டி வரவேற்பை தெரிவித்தனர்.

 இதையடுத்து, திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன், இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதனுடன் தமிழக  அமைச்சர்கள் பட்டியலையும் வழங்குகிறார்.

 அதை ஏற்றுக் கொண்டு திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன் அடிப்படையில், வரும் 7ம்தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கிறார். எனவே, பதவி  ஏற்புக்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் ஈடுபடும் கவர்னர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்த விழாவில் கலந்து கொள்ளும் அமைச்சர்களுடன் ஒன்று அல்லது இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய விஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமியின் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் அவரிடம் வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு  சென்று அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கலைஞர் நினைவிடத்துக்கு சென்ற அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு சிறிது நேரம், அமர்ந்து மூத்த தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

லட்சிய சிந்தனையோடு அமைச்சர்கள் பட்டியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிலும் புதுமை புகுத்துவார். பிரசாரத்திலும், மக்களை சந்திப்பதிலும், பொதுக்கூட்டம் நடத்துவதிலும் வித்தியாசத்தை கையாண்டார். இதனால், அவரது தலைமையில் பதவி ஏற்க உள்ள புதிய அரசில்  அமைச்சர்களாக இடம்பெற போகிறவர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதில் மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் பட்டியல் வெளியிடும் வரை அந்தப் பட்டியல் குறித்த ரகசியம் வெளியாகவில்லை. ஆளும்  கட்சியாக இருந்த அதிமுகவில் கூட எம்எல்ஏக்கள் பட்டியல் வெளியானது. இதனால் புதிய அமைச்சரவை பட்டியலும், இதுவரை வெளியாகவில்லை. இதனால் புதிய அமைச்சரவை பட்டியல் புதிய லட்சிய சிந்தனையோடு உருவாக்கப்பட்டு  வருவதாக திமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அனுபவம் மற்றும் இளமை கலந்த வேகத்துக்கு முக்கியத்துவும் ெகாடுத்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின்

திமுக கட்சியில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றவர் பேரறிஞர் அண்ணா, அவரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று  தற்போது ஆட்சி அமைக்க உள்ளது. திமுக கட்சியில் 3வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். திமுகவில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அதற்கு முன்பு சென்னை மேயராகவும், அடுத்து அமைச்சராகவும், அதை  தொடர்ந்து துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இப்படி படிப்படியாக முன்னேறி வந்த மு.க.ஸ்டாலின் தற்போது முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.



Tags : MK Stalin ,DMK ,Governor ,Banwarilal , MK Stalin elected DMK leader: Governor Banwarilal today met and demanded the right to form a government
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...