×

சேப்பாக்கத்தில் லக்னோவை வீழ்த்தி அசத்தல்: வேகப்பந்துவீச்சின் தரம்இன்னும் முன்னேற வேண்டும்; கேப்டன் டோனி பேட்டி

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 6வது லீக போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன், கான்வே 47 ரன்களும் விளாசி சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்னர் வந்த
சிவம் துபே 16 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார். மொயின் அலி தன் பங்கிற்கு 19 ரன்கள் சேர்க்க, அம்பத்தி ராயுடு தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். இறுதியில் டோனி 2 சிக்சர்களை பறக்கவிட, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது.

பின்னர், சவாலான இலக்கை துரத்திய லக்னோ அணியிலும் ஆரம்பம் அதிரடியாக இருந்தது. அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்தபோது, தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் மிரட்டலாக ஆடிய மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, சீரான இடைவெளியில் லக்னோ அணி விக்கெட்டை பறிகொடுத்தாலும், கடைசிக் கட்டத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் அயூஸ் பதோனி சிஎஸ்கே.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர். இருப்பினும், கடைசிக் கட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் நேர்த்தியாக பந்துவீசியதால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் மொயின் அலி, 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டதால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது:-
சென்னை அணியின் வேகப்பந்துவீச்சின் தரம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. பிட்சிற்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் பந்துவீச வேண்டும். பந்துவீச்சாளர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். எதிரணி வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேபோல் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால் மற்றும் ஒய்டு பந்துகளை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், வீரர்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இவ்வாறு டோனி சிரித்துக் கொண்டே கூறினார்.

சிஎஸ்கே.வை வாழ்த்தி ஹர்பஜன் டுவிட்
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சார் ரிலீஸ் ஆகியிருக்கிற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல டோனி இந்த முறை ஐ.பி.எல். கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சி.எஸ்.கே. கூட விளையாடுற
தும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு.” என்று பதிவிட்டுள்ளார்.

டோனி விளையாட தடை?
குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலேயே ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக டோனிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. தற்போது லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடவும் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை சென்னை அணி எடுத்துக் கொண்டது. இதனால் சென்னை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, கேப்டன் டோனிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப் போட்டியிலும் சென்னை அணி பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால், கேப்டன் டோனி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அதனை தான் கேப்டன் டோனி, சிஎஸ்கே வீரர்கள் வேறு கேப்டன் கீழ் விளையாட நேரிடும் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். இந்தப் போட்டியில் மட்டுமே சென்னை அணி வீரர்கள் 13 ஒய்டு, 3 நோபால்களை வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சேப்பாக்கத்தில் லக்னோவை வீழ்த்தி அசத்தல்: வேகப்பந்துவீச்சின் தரம்
இன்னும் முன்னேற வேண்டும்; கேப்டன் டோனி பேட்டி
appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Chepakuk ,Tony ,Chennai ,Chennai Super Kings ,Chennai Chepakkam Stadium ,IPL ,Chennai Super ,Kings ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ