×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (87) காலமானார். உடல்நலக்குறைவால் 10 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி காலமானார். நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்தவர் டிராபிக் ராமசாமி. சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் ராமசாமி போலீசாருக்கு உதவியதால் டிராபிக் என்ற அடைமொழியை பெற்றார். டிராபிக் ராமசாமி சாலையோரம் வைக்கப்படும் பிளக்ஸ், பேனர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தவர்.

டிராபிக் ராமசாமி கடந்த 20 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் வருவதற்கு முன்பு இருந்தே பல்வேறு தகவல்கள் மக்களை போய் சேர வேண்டும் என்று போராடி வந்தார் டிராபிக் ராமசாமி.

பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக இவர் தொடர்ந்த வழக்கு காரணமாகே தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல அதிரடியான தீர்ப்புகளை வழங்கியது. இதனிடையே இவர் தான் தொடர்ந்த பல்வேறு வழக்குகளில் முன்னின்று வாதாடி உள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியானது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில மாதங்களாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவால் 10 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி காலமானார்.



Tags : Tropic Ramasami ,Rajiv Gandhi Government Hospital ,Chennai , Traffic Ramasamy
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...