சிம்ஸ் பூங்காவில் பூத்துகுலுங்கும் 5 லட்சம் வண்ண மலர்கள்: சுற்றுலா பயணிகளுக்கு தடையால் பொலிவிழந்தது

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது. சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனையொட்டி சுமார் 5 லட்சம் பல்வேறு மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவு அமலில் உள்ளதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.

மே மாதம் இறுதியில் நடைபெறும் பழக்கண்காட்சி இந்தாண்டு நடைபெறுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. காலா லில்லி அறிமுகம்: ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் பாத்திகளிலும், ெதாட்டிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை பல வண்ணங்களில் பூக்கத்துவங்கியுள்ளன. ஆண்டிற்கு ஆண்டு மலர் கண்காட்சியின் போது சில புதிய வகை மலர்களும் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். இம்முறை ஹாலாந்து நாட்டு மலர்களான காலா லில்லி மலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மலர்களின் கிழங்குகள் ஹாலாந்து நாட்டில் இருந்து வாங்கப்பட்டு தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன. தற்போது பூங்காவில் உள்ள 350 தொட்டிகளில் இந்த மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் உள்ள நர்சரி மற்றும் கண்ணாடி மாளிகையில் இந்த மலர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>