×

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை

கோவை: அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் கோடை தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. கோவையில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் நேரம் செல்லச்செல்ல மழையாக மாறி கொட்டியது. இதனால் கணபதி, சரவணப்பட்டி, ரத்தினபுரி, காந்திபுரம், பீளமேடு, அவிநாசி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கொட்டிய மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. கோடையில் பெய்யும் மழையால் ஏரி, குளம் நிரம்புவதால் விவசாயத்திற்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடையில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பெரியகுளம் அருகே 9 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. கோடைக்காலம் தொடங்கியது முதலே மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டிய கனமழையால் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக ஓடுகிறது.



Tags : Tamil Nadu ,Agni Star , rain
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...