தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு அனுப்புக: மு.க.ஸ்டாலின் அறிவுரை !

சென்னை: கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் தமிழக அரசு வகுத்துள்ள கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கட்டுப்பாடுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன்மூலம் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால் இதனை அனைத்துத் துறைகளும் சிறப்பாகக் கண்காணித்துச் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார். தற்போது மாநிலத்தில் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்குதல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும், இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்யவும், வரும் சில நாட்களில் சிகிச்சைத் தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிர்கொள்ளத்

தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதைக் கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார்கள்.

Related Stories:

>