×

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்து இரண்டு மாதத்தில் ஒரு கோடி இளநீர் ஏற்றுமதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு அதன்  சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்படும்  செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இளநீர் உள்ளிட்டவை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ெடல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்,  விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் கொரோனா ஊரடங்கால் கட்டுப்பாடு அதிகமாக இருந்தது. இதனால் அந்நேரத்தில் குறைவான இளநீரே வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பின், பருவமழையால், இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும் அந்நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையாலும் இளநீர் விலை மிகவும் சரிந்தது. மேலும், கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை தொடர் பனிப்பொழிவு  காரணமாகவும்,  இளநீர் விற்பனை மந்தமாகி தோட்டங்களில் தேக்கமடைந்தன. பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.17ஆக சரிந்ததால்,விவசாயிகள் வேதனையடைந்தனர். அதன்பின், பிப்ரவரி மாதம் முதல்  வெயிலின் தாக்கத்தால், இளநீரின் விலை உயர ஆரம்பித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பொள்ளாச்சியிலிருந்து அதிகளவு இளநீர் அனுப்பி வைக்கும் பணி நாளுக்கு நாள் அதிகரித்தது.

அதிலும், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தை தொடர்ந்தும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால் லாரி, டெம்போ  கனரக வாகனங்கள் மூலம், நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ம் முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் இளநீர் வரை வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி இளநீர் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி இளநீருக்கு மேலும் கிராக்கி அதிகமானதையடுத்து, தற்போது, தோட்டங்களில் நேரடி விலையாக ஒரு இளநீர் விலை ரூ.33 உயர்ந்துள்ளது. மேலும், ஒரு டன் இளநீர் விலை ரூ.12 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியூர் வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்வதை தொடர்ந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வரை, பொள்ளாச்சி இளநீருக்கு தொடர்ந்து கிராக்கி இருக்கும் என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi , Pollachi, coconut , Export
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!