×

திருமயிலையில் அறுபத்து மூவர் விழா

(4.4.2023 – செவ்வாய்க்கிழமை)

பங்குனி மாதம் வந்து விட்டால் திருமயிலை எனப்படும் சென்னை மயிலாப்பூர் மக்களுக்கு குதூகலம். காரணம், கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெரு விழாவில் 63 நாயன்மார்களும் ஒரு சேர வீதி உலா வரும் அற்புத காட்சியைக் காணலாம். மயிலைதான் கயிலை. கையிலைதான் மயிலை எனும் சிறப்பு மிக்க தலம் இது. அன்னை பார்வதி தேவி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம்.

அமுதம் உண்டால் உயிர்கள் பிழைக்கும். அது தேவலோகத்தில் உள்ள சாவா மருந்து. ஆனால், இறந்து போன ஒரு பெண்ணின் (பூம்பாவை) சாம்பலில் இருந்து அவளை உயிர்ப்பித்த அற்புத நிகழ்ச்சி நடந்த தலம் திருமயிலை. இந்த ஆலயத்தில்தான் திருஞானசம்பந்தர் அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றினார். அதற்காக அவர் பாடிய அற்புதப் பதிகத்தை ஓதுவார்களுக்கு, எம பயமோ, ஆயுர் தோஷமோ இல்லை.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ
பூம்பாவாய்.

63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாறான வாயிலார் நாயனார், அவதரித்து வழிபட்டு முக்தி பெற்றதும் இந்த மயிலை தலத்தில்தான். ஆலயத்தில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா பெரும் சிறப்போடு நடைபெறும். கொடியேற்றத்தோடு தொடங்கும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

ஏழாம் நாள் திருவிழாவில், தேரில் கபாலீஸ்வரருக்கு வில் அம்புடன் கூடிய அலங்காரம் நடைபெற்று, திரிபுர சம்காரம் நடைபெறும். எட்டாம் நாள் காலையில், பூம் பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் குளக்கரையில் நடைபெறும். பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63வர் விழா பங்குனி உத்திர நன்னாளில் அதாவது 4.4.2023 செவ்வாய்க்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும்.

இறைவனைப் பாடிய 63 நாயன்மார்களும், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வீதி முழுக்க கைகூப்பி நின்ற வண்ணம் மக்களுக்கு அருள் பாலிக்கும் வீதி உலா நிகழ்ச்சி, காணக் கண் கோடி வேண்டும். அன்று திருமயிலை வீதிகளில் வங்கக்கடல் போல மக்கள் வெள்ளம் குவிந்திருக்கும். வெள்ளிச் சப்பரத்தில் கபாலீஸ்வரர், இந்த நாயன்மார்களுக்கு காட்சி தருவார்.

கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து 63வர் புறப்பாடு நடைபெறும். கற்பகாம்பாள், முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர் வலம் வருவர். மாட வீதிகளில் இந்த உற்சாகமான திருவிழா உன்னதத்தோடு நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாடனார் வடிவத்திலும் மகாவிஷ்ணு மோகினி வடிவத்திலும் காட்சி அளிப்பார்கள். பத்தாம் நாள் விழா கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். மயில் உருவில் புன்னை மரத்தடியில் இருக்கும் சிவபெருமானை வணங்கி கரம் பிடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post திருமயிலையில் அறுபத்து மூவர் விழா appeared first on Dinakaran.

Tags : Sixty Three Festival ,Thirumayila ,Panguni ,Mylapore, Chennai ,Tirumailai ,Kapaleeswarar ,Sixty-three festival ,Thirumailai ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...