தேர்தலில் அதிமுக தோல்வி எதிரொலி அட்வகேட் ஜெனரல் ராஜினாமா: கடிதத்திற்கு அரசு வக்கீல்கள் அதிருப்தி

சென்னை:  கடந்த 2016ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் முத்துக்குமாரசாமி பதவி வகித்து வந்தார். அவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தையடுத்து அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழக அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் விஜய் நாராயண், 2017 ஆகஸ்ட் 30ல் பதவியேற்றார். சுமார் 4 ஆண்டுகள் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வந்த விஜய் நாராயண் அரசுத் தரப்பில் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கான கடிதத்தை தமிழக பொதுத்துறை செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ளார். இதேபோல் அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றி வந்த மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி தனது பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறப்பு அரசு வக்கீல்கள் சி.திருமாறன், பால ரமேஷ், கூடுதல் அரசு பிளீடர்கள் ஆர்.வி.பாபு, ஜெ.புருஷோத்தமன் உள்ளிட்டோரும் அரசிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதற்கிடையே அட்வகேட் ஜெனரல் கொடுத்த ராஜினாமா கடிதத்தில் அரசு தனக்கு கொடுத்த பணிக்காலம் முடிவடைந்துவிட்டதால் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருப்பது அதிமுக வக்கீல்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ராஜினாமா செய்வதாக கூற வேண்டுமே தவிர எனது பணிக்காலம் முடிந்துவிட்டது என்று தெரிவித்திருக்கக்கூடாதுஎன்று அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

>