×

ஆர்கே நகரில் வென்றவர் இங்கு வீழ்ந்தார் கோவில்பட்டியில் டிடிவி தினகரன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கேள்விக்குறியாகும் அமமுக எதிர்காலம்

நெல்லை: கோவில்பட்டியில் டிடிவி. தினகரன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்கே நகரில் வென்றவர் இங்கு தோல்வி அடைந்ததன் மூலம் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். எனினும் டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து முதல்வரான ஓ பன்னீர்செல்வம் சசிகலா முதல்வராக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தர்மயுத்தம் நடத்தினார்.

அப்போது சசிகலாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கூவத்தூரில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தனர். ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் நுழைய முடியாத டிடிவி. தினகரன், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவை கைப்பற்ற முயன்றார். அப்போது தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் தந்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தினார். இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகினர். இதனால் டிடிவி. தினகரன் தனித்து விடப்பட்டார்.

எனினும், ஜெயலலிதா மறைவால் 2017ல் இடைத்தேர்தலை சந்தித்த ஆர்கே நகரில் டிடிவி. தினகரன் சுயேட்சையாக அதிமுகவை எதிர்த்து களமிறங்கினார். இதில், தினகரன் 89 ஆயிரத்து 13 ஓட்டுகள் பெற்று அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் டிடிவி தினகரனின் கை ஓங்கியது. அதன்பின், 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. பல தொகுதிகளில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட அமமுக குறைவான ஓட்டுக்களே பெற்றது. இதனால் சீனியர்கள் பலரும் மீண்டும் அதிமுகவிற்கு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் தான் 2021 சட்டசபை தேர்தலை அமமுக சந்தித்தது. 10 ஆண்டுகள் ஆட்சி மீது மக்களின் வெறுப்பு, இரட்டை தலைமை, ஊழல் போன்றவை அதிமுகவிற்கு இந்தத் தேர்தலில் சவாலாக இருந்தது. இதனால் 2021 தேர்தலில் தனக்கு அரசியலில் அடையாளம் வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை களமிறக்கினார். அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ ஆகியவை இணைந்து இந்தத் தேர்தலை சந்தித்தது. இந்த முறை ஆர்கே நகரில் இருந்து தாவிய டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் களம் கண்டார். அங்கு பெரும்பான்மையாக இருக்கும் தனது சமுதாய ஓட்டுகள் தனக்கு கை கொடுக்கும் என்றும் நம்பினார்.

கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாளன்று மேள தாளம், கார்கள் என்று பெரும் கூட்டத்தை திரட்டினார். பிரசாரத்திலும் கடம்பூர் ராஜூவுக்கு அமமுக கடும் நெருக்கடி கொடுத்தது. பட்டாசு வெடித்ததில் மோதல், பைக் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதன் மூலம் கோவில்பட்டி தொகுதியின் வெற்றி தமிழக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே வெளியானது. ஆனால் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 68 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று 12 ஆயிரத்து 403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 58 ஆயிரத்து 153 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். வேட்புமனு தாக்கல் செய்த பின் டிடிவி தினகரன் பிரசாரத்திற்காக தொகுதி பக்கமே வரவில்லை.. இதனால், சமுதாய வாக்குகளை மட்டும் கருதி போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு மற்ற சமுதாயத்தின் ஓட்டுகளும் கிடைக்காமல் போனது. இதனால் தான் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளரை விட 428 வாக்குகளில் கரை சேர்ந்த கடம்பூர் ராஜூ, இந்தத் தேர்தலில் 12 ஆயிரத்து 403 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டனர். இந்தத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி மூலம் அமமுகவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Ark city ,DTV ,Dinagaran , The winner in RK Nagar fell here What was the reason for the fall of DTV Dhinakaran in Kovilpatti? The future of the Amulet in question
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!