×

தமிழகத்திலேயே கோவையில் அதிகளவில் திமுக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்

தொண்டாமுத்தூர், ஏப். 4: தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் அதிகளவில் திமுக உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தொண்டாமுத்தூரில் நடந்த ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. பிறந்த நாள் விழா மற்றும் ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்துறை மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ஆயிரம் ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார் .தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி,சேலைகளை வழங்கினார். இதன் பின் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களையும்,கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார். தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கழக தலைவரும், தமிழக முதல்வருமாகிய தளபதி மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழாவினை சீரும், சிறப்புமாக கொண்டாட கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார். நடந்து வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் கோவை மாநகருக்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,ஓசூருக்கு அடுத்தப்படியாக கோவைக்கு ஐ.டி. பார்க் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூர் செல்வதை தவிர்க்கின்ற வகையில் கோவையிலேயே ஐ.டி..பார்க் அமைக்கப்பட உள்ளது. கோவை மாநகரில் சாலை வசதி,குடிநீர்,தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். எழில்மிகு கோவை என்ற திட்டத்தின் கீழ் நகர் முழுவதும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடரில் கோவைக்கு செம்மொழி பூங்கா திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது வார்டில் எந்த பகுதியில் தனக்கு அதிகளவில் ஓட்டு கிடைத்ததோ அந்த பகுதிக்கு சென்று அடிப்படை வசதிகளை மேம்படுத்துவார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் எந்த பகுதியில் தனக்கு அதிகமாக ஓட்டு கிடைத்ததோ அந்த பகுதிக்கு நேரில் சென்று தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி கொடுப்பார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகளிலும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் தானே வெற்றி பெற்றதாக, எல்லா தொகுதிகளையும் தனது தொகுதிகளாக கொண்டு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது தான் திராவிட மாடல் ஆட்சி.

கடந்த 2 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு முதல்வர் அறிவித்த நலத்திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கின்ற வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கட்சிக்காக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்க கட்சி நிர்வாகிகளும், தெரண்டர்களும் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். விழாவில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சண்முகசுந்தரம் எம்பி, முன்னாள் எம்பி நாகராஜன், தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவி கமலம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தமிழகத்திலேயே கோவையில் அதிகளவில் திமுக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Coimbatore ,Thondamuthur ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...