×

துவரங்குறிச்சியில் பரபரப்பு: அம்மன் கோயிலில் கிராம மக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

துவரங்குறிச்சி, ஏப்.4: திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் லிங்கப்பட்டி கிராம மக்கள் வருடந்தோறும் பங்குனி மாதம் பிடாரப்பட்டியில் உள்ள வேலான்மலை மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பதவிக்கு இருத்தரப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தாண்டு கோவில் திருவிழாவை லிங்கப்பட்டி கிராம மக்கள் பிடாரப்பட்டி மலையாண்டி கோயிலில் ஊர் முறைப்படி வழிபாடு நடத்த இந்து அறநிலையத்துறையினர் முறையான அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த லிங்கப்பட்டி கிராம மக்கள் சுமார் 50 பேர் நேற்று மாலை 6.30 மணியளவில் திரண்டு வந்து திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வலியுறுத்தி நேற்று மாலை துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தார்.

அப்போது அறநிலையத்துறை ஆய்வாளர், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அறங்காவலராக லிங்கம்பட்டி தரப்பில் வழிபாடு செய்ய அனுமதிக்க இயலாது என்றும், ஊர்மக்கள் தனிநபர்களாக ஆலயம் சென்று வழிபாடு செய்ய ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து லிங்கம்பட்டி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு இரவு 9.30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணிநேரம் கோயிலில் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

The post துவரங்குறிச்சியில் பரபரப்பு: அம்மன் கோயிலில் கிராம மக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Duwarankurichi ,Amman temple ,Duvarangurichi ,Lingapatti ,Tiruchi district ,Marungapuri Union ,Velanmalai ,Pitarapatti ,Panguni ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...