திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றிய திருச்சி

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார். திமுக மீண்டும் அரியணை ஏற திருச்சியில் மார்ச் மாதம் நடந்த திமுக பிரமாண்ட கூட்டம் மீண்டும் திருப்புமுனை கூட்டம் என நிரூபித்துள்ளதாக திமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். திருச்சி என்றதும் மலைக்கோட்டை மாநகர் என்று தான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் திமுகவினருக்கோ மாநாட்டின் தலைநகர் என்ற நினைப்பு தான் வரும். காரணம் இங்குதான் ஏற்கனவே ஐந்து திமுக மாநாடுகள் நடந்துள்ளது. திமுக 17.9.1949ல் சென்னையில் பெரியாரின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்டது.

அதன் பொதுச்செயலாளராக பேரறிஞர் அண்ணா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 1952ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. 1957ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரவிருந்த நிலையில் நாமும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் திமுக நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில் 1956ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் திமுகவின் 2வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் தான் திமுக தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று நிர்வாகிகளிடம் கருத்தறியும் வகையில் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் 2 பெட்டிகள் வைத்தது.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியவர்கள் மஞ்சள் பெட்டியிலும், வேண்டாம் என்கிறவர்கள் சிவப்பு பெட்டியிலும் வாக்களித்தனர். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56,942 பேரும், வேண்டாமென்று 4203 பேரும் வாக்களித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்துக்கு ஏற்ப திமுக தேர்தலில் போட்டியிட்டது. 1957ம் ஆண்டு முதன்முதலில் தேர்தலை சந்தித்த திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது. எனவே, திமுகவை அரியணையில் ஏற்றி பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்த காரணமாக அமைந்தது மாநாட்டு தலைநகர் திருச்சி தான். திருச்சியில் மாநாடு நடத்தினால் திமுக வெற்றி பெறும் என்பது ஒரு சென்டிமெண்ட் ஆக திமுகவினர் கருதுகின்றனர்.

அதன்படி தேர்தலுக்கு முன் திமுக மாநாடு சிறுகனூரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா மற்றும் தேர்தல் நடைமுறைகள் காரணமாக ேதர்தலுக்கு முன் மார்ச் 7ம் தேதி மாநாடு போல் பிரமாண்டமான சிறப்பு கூட்டம் நடந்தது. இதில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திமுகவின் 7 அம்ச திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெற்றது. மொத்தம் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் இமலாய வெற்றி பெற்றதால் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார்.

இதனால் திருச்சியில் மாநாடு போல் பிரமாண்ட சிறப்பு பொதுக்கூட்டம்  நடத்தியது தான் திமுக மீண்டும் அரியணை ஏற காரணமாக அமைந்துள்ளது என்ற திமுகவின் சென்டிமென்ட் நிரூபணமாகிவிட்டதாக திமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories:

>