×

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தேரோட்டம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருச்சுழி, ஏப்.4: திருச்சுழி  துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயில் தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருச்சுழியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு  துணைமாலை அம்மன் சமேத  திருமேனி நாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனித் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்பாள் மற்றும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்பாள் இளஞ்சிவப்பு பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தேரோட்டத்தை திருச்சுழி ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேலபாண்டியன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க, சிவாய நமஹ கோஷத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தீயணைப்பு நிலையம், தேவர் சிலை, காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக வலம் வந்த தேர், பின்னர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டனர்.

The post திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தேரோட்டம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi Thirumeninathar Temple ,Thiruchuzhi ,Upamamalai ,Amman ,Thirumeninathar temple ,Thirumeninathar ,Temple ,
× RELATED லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி