×

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த வசதியான பார்க்கிங் இடங்களை கண்டறிய கோரிக்கை

ஊட்டி,ஏப்.4: கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி கொள்ள வசதியாக ஊட்டி நகரில் பார்க்கிங் வசதிகள் உள்ள இடங்கள் கண்டறிந்து தயார்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது.இங்கு ஆண்டு முழுவதும் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும். இந்த விடுமுறையை கொண்டாடவும், அதே சமயம் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியை முற்றுகையிடுவது வாடிக்கை.

அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கோடை சீசன் இன்று துவங்கியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இந்த ஆண்டுக்கான கோடை விழா தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி மே மாதம் 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையாக பார்க்கிங் பிரச்னை உள்ளது.

இது போன்ற சமயங்களில் நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த இடமின்றி கடும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். இதனால் ஊட்டி நகரில் பார்க்கிங் பிரச்னை மீண்டும் தலைதூக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது வர கூடிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேடி அலைய கூடிய நிலை உருவாகி உள்ளது. சில இடங்களானது தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள் பலவற்றில் அனுமதியற்ற ஆட்டோ ஸ்டேண்ட்களாகவும் மாறியுள்ளன. இதுதவிர பார்க்கிங் பிரச்னையை தீர்ப்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஏடிசி., பகுதியில் குதிரை பந்தய மைதானத்தின் ஒருபகுதியில் சுமார் இரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கேற்ப வசதிகள் ஏதும் செய்யப்படாமல் உள்ளது. இந்த பார்க்கிங் தளத்தை சரி செய்து திறப்பதுடன், கோடை விழாவின் போது ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால் கோடைவிழா துவங்குவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி கொள்ள வசதியாக நகரில் பார்க்கிங் வசதிகள் கொண்ட இடங்களை கண்டறிந்து தயார் செய்திட வேண்டும். பார்க்கிங் தளங்களில் குடிநீர்,கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும். கடந்த காலங்களில் கடைபிடித்ததை போல் முக்கிய சாலை சந்திப்புகளில் வழித்தட மேப் வைப்பதுடன், க்யூஆர்., கோட் மூலம் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள்,வழி போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வசதிகள் ஏற்படுத்திர தர வேண்டும். கனரக வாகனங்கள் நகருக்குள் வரும் நேரத்ைதயும் முடிவு செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த வசதியான பார்க்கிங் இடங்களை கண்டறிய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்