×

கொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

விருத்தாசலம், ஏப். 4: விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தங்கள் வேண்டுதலை வேண்டி பிராது கட்டினால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். அதுபோல் மாதம்தோறும் வரக்கூடிய சஷ்டி, கிருத்திகை, சங்கடகர சதுர்த்தி மற்றும் வருடந்தோறும் நடைபெறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக நடந்து வரும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமிகள் காலை, மாலை என இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் அலங்காரத்தில் அருள்பாலிக்க உற்சவ மூர்த்திகள் மணவாளநல்லூர் கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

The post கொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Panguni ,Uthra ,Chariot ,Kolanjiappar Temple ,Vridthachalam ,Siddhi ,Vinayagar Udanurai Kolanjayappar temple ,Manavalanallur ,Vrudhachalam.… ,Panguni Uthra ,Kolanjayappar ,
× RELATED தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்