சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி எதிரொலி!: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ராஜினாமா..!!

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஒவ்வொரு அரசும் பதவியேற்கும் போது தமிழக அரசின் சார்பில் வாதாடுவதற்காக தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் என்று அரசு தரப்பில் நியமனம் செய்யப்படுவர். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து தற்போதைய தலைமை வழக்கறிஞராக இருக்கக்கூடிய விஜய நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு அவர் அனுப்பியிருக்கிறார். 

இதையடுத்து புதிதாக பதவி ஏற்கக்கூடிய அரசானது புதிய தலைமை வழக்கறிஞரை நியமிக்கும். அவர் இனி தமிழக அரசுக்கு எதிரான வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடுவார். அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி தனது சொந்த காரியங்களுக்காக பதவி விலகியதை அடுத்து விஜய நாராயணன் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்தார். 

குறிப்பாக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஸ்டெர்லைட் மூடப்பட்டதை எதிர்த்த வழக்கு, சட்டப்பேரவைக்குள் திமுகவினர் குட்கா கொண்டு சென்ற வழக்கு உள்ளிட்டவைகளில் தமிழக அரசுக்கு ஆதரவாக வாதாடியவர் என்பது நினைவில்கொள்ளத்தக்கது. இதுவரை தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் மட்டுமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: