×

சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி!: புதுச்சேரி முதலமைச்சராக வருகின்ற 7ம் தேதி ரங்கசாமி பதவியேற்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சராக வருகின்ற 7ம் தேதி ரங்கசாமி பதவியேற்கிறார். புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10, பாஜக 6 என மொத்தமாக 16 இடங்கள் இருப்பதால் புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. 


இதையடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிட தலைவர் நிர்மல் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. அதன் பிறகு எடுக்கப்பட்ட முடிவில்,  புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவராக இருக்கும் ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிப்பது என்றும் அதேபோல் சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர்கள் பதவி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவி கொடுப்பதற்கு ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். 


இருப்பினும் தங்களுக்கு 3 அமைச்சர் பதவிகளை வழங்குங்கள் என்று பாஜக, ரங்கசாமியிடம் வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் 2 அமைச்சர் பதவி மட்டுமே வழங்க முடியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதேபோல் வாரிய தலைவர், நியமன எம்.எல்.ஏக்கள் பதவிகளை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சரிசமமாக பிரிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது. இதனையடுத்து, புதுச்சேரி முதலமைச்சராக வருகின்ற 7ம் தேதி ரங்கசாமி பதவியேற்கிறார். 



Tags : National Democratic Alliance ,Rangasamy ,Puducherry Chief Minister , Legislative Assembly Election, Pondicherry, Chief Minister, Rangasamy
× RELATED மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து...