×

(தி.மலை) சமுதாய அக்கறை கொண்டவர்கள் திமுகவில் இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர்அமைச்சர் எ.வ.வேலு பேச்சுதிருவண்ணாமலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

திருவண்ணாமலை, ஏப்.5: சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களும், நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர்களும் திமுகவில் இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடன் பிறப்பாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி 2வது வார்டு அம்பேத்கர் தெருவில் நேற்று திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. மகளிர் அணி பிரசார குழு செயலாளர் மாலதி நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் வரவேற்றார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

ஏழை, எளிய, நலிந்த நிலையில் உள்ள மக்களின் நலன்களை மேம்படுத்தும் திட்டங்களையும் அதிக அளவில் செய்து, சமுதாய புரட்சியை நடத்தியவர் கலைஞர். அவரது ஆட்சியில்தான், அருந்ததியினர் சமுதாயத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்மூலம், இன்று ஏராளமானோர் உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். எனவே, கலைஞரின் நூற்றாண்டு விழாவை பெருமைப்படுத்துவதற்காக திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர்கள் திமுகவில் இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.

புதிய பல கட்சிகள் வருகின்றன. நாளடைவில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், தமிழர்களின் நலனுக்காக, முன்னேற்றத்துக்காக, தமிழர்கள் தலைநிமிர வேண்டும் என்பதற்காக சமதர்மம் மேலோங்கி சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதற்காக உருவான கட்சி திமுக. 1949ல் கட்சி தொடங்கியதில் இருந்து இன்றைக்கு வரை தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயல்படுகிற இயக்கம் திமுக. திருவண்ணாமலையில் கடந்த 1957ல் இருந்து இப்போதுவரை திமுக மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. விபரம் தெரிந்தவர்கள், நாட்டு நடப்பை அறிந்தவர்கள் உள்ளதால், இந்த வெற்றி தொடர்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலனுக்கான அரசை நடத்தி வருகிறார்.

மகளிர் குழு கடன் ரத்து, கட்டணமில்லா பஸ் பயணம், வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ₹1,000 உரிமைத்தொகை என ஏராளமான சலுகைகளை, திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்துக்காக முதல்வர் வழங்கியிருக்கிறார். அதனால், திமுகவில் இணைவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இதில், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி குட்டி க.புகழேந்தி, துரை.வெங்கட், நகராட்சி துணைத்தலைவர் சு.ராஜாங்கம், சி.சண்முகம், அமைப்புசாரா தொமுச ஏ.ஏ.ஆறுமுகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயராஜ், கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை) சமுதாய அக்கறை கொண்டவர்கள் திமுகவில் இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர்
அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திருவண்ணாமலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
appeared first on Dinakaran.

Tags : D.malai ,DMK.Minister ,AV.Velu ,Thiruvannamalai ,DMK ,Minister ,AV Velu ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்