சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி!: கோபாலபுரம் இல்லம் சென்று தாயிடம் ஆசி பெற்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் சென்று தனது தாயிடம் ஆசி பெற்றார். சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றி பெற்றனர். தற்போது முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து, ஸ்டாலின் தாயாரை சந்தித்து ஆசி பெற்றதோடு தன்னுடைய வெற்றியை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். அதேபோல் திமுகவின் மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லம் என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வாழ்ந்த இல்லம். எந்தவொரு உணர்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும் கோபாலபுரம் இல்லம் சென்று அங்குள்ளவர்களிடம் ஆசி பெறுவது ஸ்டாலினின் வழக்கம். 

அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மு.க. ஸ்டாலின் தனது சொந்தங்களுடன் வெற்றியை பகிந்துக் கொண்டு வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் செல்லவிருக்கிறார். அங்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருக்கக்கூடிய உறுப்பினர்கள் வரவுள்ளனர். ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. 

Related Stories:

>