×

செங்கல்பட்டில் தனியார் பள்ளி எதிரே டுவீலர்கள் மோதல்: வீடியோ வைரல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செயின்ட் ஜோசப்,செயின்ட் மேரீஸ், தூய கொளம்பா மற்றும் எஸ்டிஏ உள்ளிட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. புனித சூசையப்பர் தேவாலயம் உள்பட பிரபல இரண்டு தேவாலயங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம், தனியார் மருத்துவமனை, திரையரங்கம், மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளன. இந்த முக்கிய சாலையின் வழியாக காஞ்சிபுரம், வேலூர் பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் சாலைகளை ஆக்ரமித்து நிறைய கடைகள் அமைந்துள்ளது. அதேபோல் கார் ஆட்டோ நிறுத்தி வைக்கப்படுகிறது.சிக்னல் அமைக்கப்பட்டு அது விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுகிறது.

போக்குவரத்தை கட்டுப்படுத்த பயன்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க, நடந்து செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கடந்த சில மாதங்களாக இந்த சாலையில் கால்வாய் அமைத்து அதன் மேல் சாலை அமைக்கப்படுகிறது. அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடிய முக்கியமான இந்த சாலையில், சாலை பாதுகாப்பு வசதி கிடையாது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மூன்று பள்ளிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் சைக்கிளிலும் பெற்றோருடன் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் செல்லும் போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தையை அதன் அம்மா டு வீலரில் அழைத்துக்கொண்டு திம்மாவரம் நோக்கி செல்வதற்காக பள்ளியை கடக்கும்போது, திம்மாவரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த டு வீலர் மீது மோதும் காட்சி தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தாய், மகள் ளுக்கு கால்முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்வதற்கு காவலர்கள் கிடையாது. ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்துவது கிடையாது. ஏற்கனவே போடப்பட்டிருந்த வேகத்தடையையும் அகற்றப்பட்டு விட்டது. இவற்றை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லைஎன, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post செங்கல்பட்டில் தனியார் பள்ளி எதிரே டுவீலர்கள் மோதல்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,St. Joseph ,St. Mary's ,Pure Columba ,STA ,Bus ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!