தி.நகர், மயிலாப்பூர், ராயபுரம் தொகுதிகளில் வெற்றி: அதிமுக கோட்டையை தகர்த்த திமுக: அதிமுக-பாஜ வாக்கு வங்கி சரிந்தது: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், மயிலாப்பூர், தி.நகர் தொகுதிகளில் கடந்த 2006 முதல் தொடர்ந்து 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை தி.நகரில் சத்யா, மயிலாப்பூரில் நட்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோன்று ராயபுரம் தொகுதியிலும் அதிமுக தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து நான்கு முறையும் அமைச்சர் ஜெயக்குமாரே வெற்றி பெற்று வந்தார். இதனால், மயிலாப்பூர், தி.நகர், ராயபுரம் ஆகிய 3 தொகுதிகளும் அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வந்தது. இதில், மயிலாப்பூர், தி.நகர் தொகுதிகளில் பிராமணர் சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால், அதிமுகவை இந்த தொகுதிகளில் வெல்வது என்பது கடினம் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இம்முறை கூடுதல் பலமாக பாஜ வேறு அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனால், தி.நகர், ராயபுரம், மயிலாப்பூர் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் எம்எல்ஏ நட்ராஜ், தி.நகர் எம்எல்ஏ சத்யா, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள், 3 பேரும் தொகுதியின் வளர்ச்சிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. தி.நகர் தொகுதி எம்எல்ஏ மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

இதனால், 3 பேர் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இருப்பினும் இந்த 3 பேருக்கும் அதிமுக தலைமை இந்த முறை ேபாட்டியிட வாய்ப்பு வழங்கியது. இந்த நிலையில் அதிமுக-பாஜ கூட்டணி என்பதால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று இந்த 3 பேரும் கருதினார்கள். ஆனால், இந்த முறை அதிமுக 3 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அதிமுக கோட்டை என்று சொல்லப்பட்டு வரும் 3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று, கோட்டை என்ற எண்ணத்தை தகர்த்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Related Stories:

>