சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் வாரி சுருட்டிய திமுக: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பெறுவாரியான வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியை தவிர மற்ற 6 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் என 4 தொகுதிகளையும் திமுக வெற்றி பெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்று இருந்தது. தற்போது இரண்டு மாவட்டமும் திமுக வசமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிகளை தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் என 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 37 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் இல்லாத அளவிற்கு திமுக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் என 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் தனது வெற்றியை திமுக பதித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில்  ஆர்.கே.நகர், ராயபுரம், விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகளை தவிர மற்ற 11 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் பெரும்புதூர் தொகுதியை தவிர மற்ற 3 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று இருந்தது. தற்போது மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

Related Stories:

>