அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை பெங்களூருக்கு பதிலடி தருமா கேகேஆர்?

அகமதாபாத்: ஐபிஎல்  தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் பின்தங்கியுள்ளது. அந்த அணியில் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்ஸல், பேட் கம்மின்ஸ் மூவர் அணிதான் அவ்வப்போது அசத்தி அணியை கரை சேர்க்க முயலுகிறது. ஆனால் கேப்டன் இயான் மோர்கன் உள்ளிட்ட வீரர்கள் இன்னும் முழுத்திறனை  வெளிப்படுத்தவில்லை. அது பெங்களூருக்கு சாதகமாக இருக்கலாம்.

ஆர்சிபி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. கேப்டன் கோஹ்லி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் மூவரணி தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஆனால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த 3 பேரும் ஆடிய விதம் கொல்கத்தாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடும். அந்த நம்பிக்கையுடன் முதல் சுற்றில் தோற்றதற்கு பெங்களூருக்கு பதிலடி தர முயலும். காரணம் இனி கிடைக்கும் வெற்றிகள்தான் அதன் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும்.

இதுவரை மோதியதில்...

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் இதுவரை 27 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. அவற்றில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், பெங்களூர் 13 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. இரு அணிகளும் ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுகளில் மோதியதில்லை. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில்  பெங்களூர் 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக கொல்கத்தா 222 ரன், பெங்களூர் 213 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக கொல்கத்தா 84 ரன், பெங்களூர் 49 ரன்னில் சுருண்டுள்ளன.

இந்த முறை மோதியதில்...

நடப்பு தொடரில் இரு அணிகளும் ஏப்.18ம் தேதி மோதிய லீக்  போட்டியில், முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 166 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் பெங்களூர் 38 ரன் வித்தியாசத்தில் வென்றது.

Related Stories:

>