×

பெரும்பாலான தொகுதிகளின் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜ கூட்டணி வெற்றி புதுவையில் நான்காவது முறையாக ரங்கசாமி ஆட்சியமைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி -23, காரைக்கால் -5, மாகே -1, ஏனாம் -1 ஆகிய 30 தொகுதிகளுக்கு 116 சுயேட்சை உட்பட 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு, கடந்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், மாகே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையத்திலும் வைக்கப்பட்டது.
 
இந்த 6 மையங்களிளில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது புதுச்சேரியின் முதல் வெற்றியாக உப்பளம் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தெற்கு மாநில செயலாளர் சிவா 6950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம், அதிமுக வேட்பாளர் அசானாவை விட 12034 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் 2750 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக ஜான்குமார் 7229 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஏனாமில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி, சுயேட்சை வேட்பாளர் கோளப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கைவிட 673 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். இருந்தபோதும் தட்டாஞ்சாவடி தொகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்ற இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சேதுசெல்வத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல், கதிர்காமம், மங்கலம், ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, நெடுங்காடு ஆகிய தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்றது. இதுமட்டுமின்றி, லாஸ்பேட்டை காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன், பாஜக மாநில தலைவர் சாமிநாதனை 5701 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஒட்டுமொத்தத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களிலும் சுயேட்சைகள் 5 இடங்களிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி 7 இடங்களில் பெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், நான்காவது முறையாக ரங்கசாமி ஆட்சி அமைக்கிறார்.

Tags : Rangasamy ,NR Congress ,BJP alliance , Rangasamy is ruling for the fourth time in a row as the NR Congress-BJP alliance wins most of the constituencies
× RELATED வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கும் பாஜ வேட்பாளர்: வீடியோ வைரல்