×

அயனாவரத்தில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, வெளி மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அயனாவரம் நியூஆவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, அதில் 4 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வண்டியை ஓட்டி வந்த ராயபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த வெங்கடேசன் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில், அயனாவரம் உஜ்ஜைனி தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிவேன் ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது அதில் இருந்த 3 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து மொத்தம் 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அயனாவரம் சோலை அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (60) என்ற நபர், அவரது டிரைவர் வெங்கடேசன் மூலமாக ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மனோகரனை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post அயனாவரத்தில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ayanavaram ,Perambur ,Chennai ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது