×

பள்ளிப்பட்டில் போக்குவரத்து நெரிசல் கனரக வாகனங்களை பகலில் அனுமதிக்கக் கூடாது: பொதுமக்கள் வேண்டுகோள்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பல அரசு அலுவலகங்கள் தனியார் மருத்துவமனைகள், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. மேலும் பள்ளிப்பட்டு பேரூராட்சியை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிடும் கரும்புகளை டிரக்குகளிலும், டிராக்டர்களிலும் ஏற்றி பள்ளிப்பட்டு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் நெலவாய் கிராமத்தில் இருக்கும் தனியார் கரும்பு ஆலைக்கு எடுத்து செல்கின்றனர். அந்த வாகனங்களில் அதிக அளவில் கொண்டு செல்வதுடன், கரும்பு கட்டுகளை வலது, இடதுபுறம் வாகனங்களுக்கு வெளியே நீட்டியபடி சாலைகளை அடைத்துக்கொண்டு எடுத்துச் செல்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களில் இந்த வாகனங்கள் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்குள் நுழைவதால் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் நிலை ஏற்படுகின்றன. இதில் அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் சிக்கிக்கொண்டு பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. பா.சிபாஸ் கல்யாண் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்குள் பகல் நேரத்தில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வராமல் ஓரிடத்தில் நிறுத்தி வைத்து அவற்றை இரவு 8 மணிக்கு மேல் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதித்தால் இந்த நெரிசலை தவிர்க்கலாம் என்று பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளிப்பட்டில் போக்குவரத்து நெரிசல் கனரக வாகனங்களை பகலில் அனுமதிக்கக் கூடாது: பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Pallipattal ,Pallipattu ,Tiruvallur District ,
× RELATED நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட...