×

கலாஷேத்ரா நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் கலாஷேத்ரா நிர்வாகத்தை கண்டித்து திருவான்மியூரில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்களை கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவான்மியூர் சிக்னல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பெண்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா கூறுகையில், ‘‘சென்னையில் ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் கீழ் இயங்கக்கூடிய கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்தில் படிக்கக்கூடிய மாணவிகள், அங்குள்ள பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார்கள் கொடுத்த நிலையில் பத்மன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் இது போதாது. உடனடியாக சம்பந்தப்பட்ட 3 பேராசியர்களையும் விசாரிக்க வேண்டும். இத்தகைய புகார் எழுந்தவுடன் தேசிய மகளிர் ஆணையம் தனது விசாரணையை துவங்கியது.

ஆனால் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக மகளிர் ஆணையம் தனது விசாரணையை திரும்பப் பெறுவதாக அறிவித்தது சரியில்லை. உடனடியாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். புகார்கள் எழுந்தவுடன் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கிறது. மாணவிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கின்ற நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுப்பு அறிவித்துள்ளது. அதனை வாபஸ் பெற வேண்டும்,’’ என்றார்.

The post கலாஷேத்ரா நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Matar Sangam ,Kalashetra ,Durai Pakkam ,Thiruvanmiyur ,Dinakaran ,
× RELATED தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது...