×

உலகப் பிரசித்தி பெற்ற கலைகளின் ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது எப்படி? பணத்துக்காக பாதை மாறிய பயங்கரம்

பரதமும் இசையும் நமது கலை பண்பாட்டு அடையாளமாக திகழும் நிலையில், இவற்றை வளர்ப்பதற்காக துவக்கப்பட்ட ஒரு கலைக்கூடம், இன்று காம விளையாட்டுக்கான களமாகி, இதுவரை சேர்த்து வைத்த அத்தனை பெருமைகளையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. கவின் கலைக் கல்லூரியான கலாஷேத்ராதான் அது. காலில் சலங்கையுடனும், நெஞ்சில் கலைக் கனவுகளுடனும் இதற்குள் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் வரை பெருமையை பரப்பிய இந்தக் கல்லூரியை, உயரிய நோக்கத்தோடு உருவாக்கியவர் ருக்மணி தேவி. சமூக அக்கறையும், ஆன்மீக சிந்தனையும் கொண்ட இவர், மதுரையில் 1904 பிப்ரவரி 24ல் பிறந்தார். இவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி சென்னையில் உள்ள தியாசபிக்கல் சொசைட்டியில் பணியாற்றியதால், ருக்மணி தேவியும் சென்னையில் படித்தார். பின்னர் அன்னிபெசன்ட் அம்மையாரை சந்திக்க லண்டனுக்கு ஜார்ஜ் அருண்டேலுடன் 1920ல் சென்றார். அப்போது அவருக்கு வயது 16. அவர், அருண்டேலை திருமணம் செய்து கொண்டார். அந்தக் காலத்தில் சாஸ்திரியின் மகள், அருண்டேலை திருமணம் செய்தது பெரிய புரட்சியாக பார்க்கப்பட்டது.

அதன்பின்னர் அவர், வெளிநாட்டில் வசித்தபோது ரஷ்யாவின் பாலே நடனத்தை முறைப்படி கற்றார். பின்னர் இந்தியாவுக்கு அவர் திரும்பியபோது தேவதாசிகளால் மட்டுமே ஆடக்கூடிய ‘சதிர்’ என்ற பரதநாட்டிய நடனத்தைப் பார்த்தார். அந்த நடனம், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த நடனத்தின் மீது பற்றுக் கொண்ட ருக்மணிதேவி, அதை முறைப்படி கற்றுக் கொண்டார். இந்த நடனத்தை பார்ப்பதே தவறு என்ற காலக்கட்டத்தில் இந்த நடனத்தைக் கற்றுக் கொண்டவர், சதிர் என்ற பரதநாட்டியத்தை, பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்தையும் கலந்து அனைவரும் ரசிக்கும்படி அரங்கேற்றினார்.

பின்னர் இதை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கலாஷேத்ரா என்ற அமைப்பைத் தொடங்கி பரதநாட்டியத்தை உலகறியச் செய்தார். ஆரம்பத்தில் இங்கு பரதநாட்டியம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் மோகினி ஆட்டம், கேரளாவின் கதகளி ஆகிய நடனங்களோடு சேர்த்து, வீணை, வயலின் மற்றும் பாட்டு ஆகிய கலைகளோடு, சிற்ப கலை. பெயின்ட்டிங், நெசவு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். நெசவில் இயற்கை முறையிலான சாயத்தையும் பயன்படுத்தி நெசவு செய்ய தறிகளையும், நெசவுக் கூடங்களையும் ருக்மணிதேவி ஆரம்பித்தார்.

கலாஷேத்ரா புடவை உலக பிரசித்தி பெற்றவை.சமூக அக்கறை மற்றும் ஆன்மீகத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாஷேத்ரா, இன்று செக்ஸ் ஷேத்திரமாக மாறியதைக் கண்டு முன்னாள் மாணவ, மாணவிகள், அந்த நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், அதன் நலன் விரும்பிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ருக்மணிதேவியின் சேவையைப் பார்த்த மெரார்ஜி தேசாய், 1977ம் ஆண்டு ருக்மணி தேவிக்கு குடியரசுத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று மறுத்த ருக்மணி தேவி, மக்களுக்கு தொண்டு செய்வதுதான் முக்கியம் என்றார்.

இதற்காக கலாஷேத்ராவில் இந்த நடனம், இசை கல்லூரியோடு, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அடங்கிய இரு பள்ளிகளும் தொடங்கப்பட்டன. சமூக மாற்றத்திற்காக தொடங்கப்பட்டு நாட்டின் உச்சப்பட்ச பதவியான ஏன் இந்த நாட்டின் முதல் குடிமகனாக பார்க்கப்படும் ஜனாதிபதி பதவியை வேண்டாம் என்று தள்ளிய ருக்மணிதேவியின் நிறுவனம், இன்று பணத்தை பங்கிடுவதிலும், பதவிக்காக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலும் பதவி வெறி ஷேத்திரமாகவும், செக்ஸ் ஷேத்திரமாகவும் மாறியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

வாரிசு போட்டி: ருக்மணி தேவிக்குப் பிறகு சங்கரமேனன், நிர்வாகத்துக்கு பொறுப்பு ஏற்றார். அவரது காலத்துக்குப் பிறகு, கலாஷேத்திராவின் தரமும் நிறமும் மாறி விட்டது. அவரது நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று போற்றப்பட்டது. அவரது காலத்தில் 1991ல் அடுத்த வாரிசு (தலைமைப் பதவிக்கு) யார் என்ற போட்டியில் சங்கரமேனன் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது யார்? யாருக்காக தாக்குதல் நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. அந்த தாக்குதலுக்குப் பிறகு மனமுடைந்த சங்கரமேனன், சில மாதங்களிலேயே உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு தாக்குதலும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

சங்கரமேனன் நிர்வாகம் செய்த காலத்தில், சாரதா ஆப்மென் டீச்சர், பத்மாஷினி டீச்சர், கமலா டீச்சர் ஆகியோர் பணியாற்றினர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு ருக்மணி தேவையை போல் உயரிய பண்புகளையும் போதித்து வழிநடத்தினர். அவர்கள் மாணவ, மாணவிகளோடு சக நண்பர்களாக பழகி, கலாஷேத்திரத்தை வளர்த்தனர். அவர்களது காலத்துக்குப் பிறகு அந்த இடங்களை இதுவரை யாரும் நிரப்பவில்லை. வெற்றிடமாக உள்ளது. இதனால் சங்கரமேனன் காலத்துக்குப் பிறகு, 1993ம் ஆண்டு ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பரிந்துரையின் அடிப்படையில் கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது.

நிதி உதவிகளை ஒன்றிய அரசே செய்ய ஆரம்பித்தது. அதன்பின்னர் ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சன் என்பவரை இயக்குநராக நியமித்தது. அவரது காலத்தில் பல போட்டிகளை நடத்தத் தொடங்கியதால், நிதி கொட்ட ஆரம்பித்தது. ஒன்றிய அரசும் பணத்தை வாரி இறைத்தது. இதனால் சமூக அக்கறையோடு தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் அரசியல் புகுந்து விளையாடத் தொடங்கியது. பல நிதிமுறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தது. பின்னர் பாஜ தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தபோது, அவர் வெளியேற்றப்பட்டார்.

பணத்தை சுருட்ட போட்ட புது திட்டம்: கலாஷேத்ரா மாணவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூர், டேராடூன், அகமதாபாத் ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிக்கள் நடத்தப்படும். இதற்காக கோலம் போடுவது முதல் அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை அழைத்துச் செல்வார்கள். இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படும். அதில்தான் முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தன. முன்பு சென்னையில் உள்ள கலாஷேத்ராவில்தான் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் நிர்வாகம் சென்ற பிறகு வெளி மாநிலங்களில் நடத்த ஆரம்பித்தனர். அப்போதுதான் பணத்தை சுருட்ட முடியும் என்று முடிவெடுத்தனர்.

அதோடு, இதற்காக கலாஷேத்ராவில் தற்காலிகமாக (ரெப்பெட்ரி கம்பெனி) ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு மூலம்தான் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு ரேவதி ராமச்சந்திரனால் நியமிக்கப்பட்டனர். இவர்களோடு சேர்த்து மோகன், கிரித்மது, கே.பி.ராகேஷ், ஸ்ரீஜித் மற்றும் ஜோஷ்னா மேனன், ஸ்ரீதேவி, இந்துநிதி ஆகிய பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த கேரளா ஆசிரியர்களுக்கு தலைவர்போல ஹரிபத்மனும், ஜோஷ்னா மேனனும் செயல்பட்டு வந்தனர்.

இவர்களுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. இவர்களை கேட்டுத்தான் இயக்குநர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். மீட்டிங் நடத்தினால் கூட இவர்கள் மட்டுமே பேசுவார்கள். இவர்கள்தான் முடிவை சொல்வார்கள். அதை ஆமாம் போட்டு விட்டு அனைவரும் செல்ல வேண்டும் என்பதுதான் ரேவதி ராமச்சந்திரனின் எழுதப்படாத உத்தரவாகவே இருந்தது. இந்த தற்காலிக நிறுவனம்தான் சென்னையில் மட்டுமல்ல வெளிமாநிலங்களில் நடத்தும் நடனம், பாட்டு என அனைத்து போட்டிகளையும் நடத்தும். இவர்கள்தான் நிதியை கையாளுவார்கள். அதில்தான் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் ரேவதி ராமச்சந்திரனின் கணவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருப்பதால், இயக்குநரை யாரும் கேள்வி கேட்க முடியாது.

வாய்ப்பை காட்டி வலை விரிப்பு: இதனால் ஆண் ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெண் ஆசிரியர்களும் பணத்தை போட்டிகள் என்ற பெயரில் சுரண்ட ஆரம்பித்தனர். பல ஆண்டுகாலமாக இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல்களை செய்யத் தொடங்கினர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் நடனத்திற்கோ, போட்டிகளுக்கோ அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைகளை கூறித்தான் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். பல இடங்களில் விஐபிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுடன் தனியாக சந்திப்புக்கும் ஏற்பாடுகளை இவர்கள் செய்து கொடுத்துள்ளனர். தாங்கள் சொன்னபடி நடந்தால்தான், இதுபோன்ற வாய்ப்புகளை வாங்கித் தருவோம் என்று ஹரிபத்மன், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத், சஞ்சித் லால் ஆகியோர் கூறியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆசிரியைகளிடம் மாணவிகள் புகார் செய்தபோது, அவர்கள் தட்டிக் கேட்பதற்கோ, அல்லது மாணவிகளுக்கு ஆதரவாகவோ செயல்படாமல், புகார்கள் கொடுக்கும் மாணவிகளை மிரட்டவும் தொடங்கினர். விஷயம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் பணிகளை பெண் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். இதற்கு காரணம், அவர்கள் பணம் சுருட்டுவதை ஆண் ஆசிரியர்கள் கேட்பதில்லை. இதனால் நமக்கான பங்கு போய்விடும், வருமானம் போய்விடும் என்று கருதி, மாணவிகளுக்கு என்ன ஆனால், எங்களுக்கென்ன என்று இருந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இயக்குநரின் ஆதரவு, பணம், பணத்துக்காக துணை போகும் ஆசிரியைகள் என்று அனைத்து தரப்பினரின் ஆதரவு இருந்ததால் ஹரிபத்மன் போன்ற ஆசிரியர்கள் தங்களை கேட்க ஆள் இல்லை என்ற தைரியத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். மேலும், வெளியில் தெரிந்தாலும் இயக்குநரின் கணவர் ஆர்.எஸ்.எஸ்சில் இருப்பதால் பிரச்னைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக, துணிந்து மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.

சமூக அக்கறை, ஆன்மீகத்துக்காக தமிழ் பெண்ணால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு இன்று மலையாளிகளின் கையில் மொத்தமாக சிக்கிக் கொண்டதோடு, கலாச்சாரத்தை பரப்ப பயன்படுத்தப்பட்ட அமைப்பு இன்று செக்ஸ் ஷேத்திரமாக மாறியுள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கலா ரசிகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ருக்மணி தேவிக்குப் பிறகு சங்கரமேனன், நிர்வாகத்துக்கு பொறுப்பு ஏற்றார். அவரது காலத்திற்குப் பிறகு கலாஷேத்திராவின் தரமும், நிறமும் மாறிவிட்டது. சங்கரமேனன் நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று போற்றப்பட்டது. அவரது காலத்தில் 1991ல் அடுத்த வாரிசு (தலைமைப் பதவிக்கு) யார் என்ற போட்டியில் சங்கரமேனன் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது யார்? யாருக்காக தாக்குதல் நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

  • கதகளிக்கு முக்கியத்துவம்
    கலாஷேத்திரத்தில் ஆரம்பத்தில் பரதநாட்டியம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் வீணை, வயலின், ஓவியம், நெசவு என்று தமிழர்களின் பாரம் பரியத்தை பறைசாற்றும் விதமாக தொடங்கப்பட்ட அமைப்பு, இப்போது மலையாளிகளின் கதகளி நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம், இயக்குநர்கள் முதல் ஆசிரியர்கள் அனைவரும் என 90 சதவீதம் பேர் மலையாளிகள்தான். இதனால் தங்கள் மாநிலத்தில் பிரசித்த பெற்ற கதகளிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அந்த மாநில மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்தனர். ஒவ்வோர் ஆண்டும் கதகளி போட்டியை நடத்தி வந்தனர். சமீபத்தில் கலாஷேத்ராவில் 5 நாட்கள் கதகளி விழா கொண்டாடப்பட்டது. இதற்கான நிதியை, ஒன்றிய அரசும், தொழில் அதிபர்களும் தாராளமாக வழங்கினர். இதைக் கொண்டு தமிழகத்தில் கதகளி விழா நடத்தினர். அதிலும் பெரிய அளவில் பணத்தை சுருட்டினர். தமிழரால் தொடங்கப்பட்ட நிறுவனம் மலையாளிகளின் கேந்திரமாக மாறிவிட்டது.
  • ஆர்எஸ்எஸ் கணவரால் கைமாறிய ஆதிக்கம்
    தமிழர்களால், தமிழ் கலாச்சாரத்தால், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுக்க தொடங்கப்பட்ட கலாஷேத்திரம், அதன்பின்னர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. தற்போது ரேவதி ராமச்சந்திரன் இயக்குநராக உள்ளார். இவரது கணவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகராக உள்ளார். இதனால்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. ஏன் மலையாளிகளின் கோட்டையாகவே கலாஷேத்ரா மாறி விட்டது. அதன்பின்னர் பரதநாட்டியத்திற்கு பதில் கதகளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ரேவதி ராமச்சந்திரன் பதவி ஏற்றார். கலாஷேத்ராவைப் பொறுத்தவரை அங்கு பயின்றவர்கள், தலைமை பொறுப்புக்கு வந்தால், 5 ஆண்டுகள் இயக்குநராக இருக்கலாம். அங்கு பயிலாதவர்கள் பணியில் சேர்ந்தால், 3 ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் ரேவதி ராமச்சந்திரன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளார். அவரது பணியை நீட்டிக்கவும் தற்போது முயற்சிகள் நடக்கின்றன.
  • அன்றும் இப்படித்தான்
    ரேவதி ராமச்சந்திரனுக்கு முன்னர் பிரிய தர்ஷினி கோவிந்த், இயக்குநராக இருந்தார். அவரும் கேரளாவைச் சேர்ந்தவர். ஆனால் அவரது காலத்திலும் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் ஒரு ஆசிரியர் தவறு செய்தது உண்மை என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல், தொடர்ந்து காப்பாற்றத் தொடங்கியதால்தான் பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

The post உலகப் பிரசித்தி பெற்ற கலைகளின் ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது எப்படி? பணத்துக்காக பாதை மாறிய பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Bharata ,Pankaram ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...