×

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

ஆவடி: ஆவடி அருகே பூரணி நகர் பகுதியில் புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பூரணி நகர் பகுதியில் அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், குடியிருப்போர் நலசங்கத்தின் பொருளாளர் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது பூரணி நகரில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் செல்போன் டவர் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதனை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். மேலும், இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தோம்.

ஆனால், இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தோம். அந்த வழக்கின் தீர்ப்பானது இங்கு செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றால், இங்கு வாழும் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதன் பின்னரே செல்போன் டவர் அமைப்பது தொடர்பான முடிவு எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், செல்போன் டவர் அமைக்கும் வேலை நிறுத்தப்பட்டது. ஏனென்றால் அந்த செல்போன் டவர் அமைப்பதற்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. மீண்டும் சில வாரங்களுக்கு முன்பு, அதே இடத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது, காரணத்தை கேட்டதற்கு, கலெக்டர் உத்தரவு வழங்கி விட்டார் என்று அனுமதி கடிதத்தை காண்பித்தனர். இதனால், மீண்டும் கலெக்டரிடம் புகார் மனு அளித்தோம். இதற்கு, கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தோம். அப்பொழுது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, அங்கு வாழும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு விட்டோம் என்று கூறினர். உண்மையில் பொதுமக்கள் வாழும் பகுதியில் இதுவரை எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. இதில், ஆவடி வட்ட தாசில்தார் வெங்கடேஷ் இங்கு உள்ள மக்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கடிதம் அளித்ததாக பொய்யான அறிக்கையை தயார் செய்து அதன் பெயரிலேயே இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறோம். இப்பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Purani Nagar ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பில்...