×
Saravana Stores

திருவள்ளூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் ஒருவருக்கு கால் துண்டானது மேலும் ஒருவருக்கு பலத்த தீக்காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 118ம் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்றுமுன் தினம் மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து, அடி தாண்டம் போடுதல் நிகழ்ச்சியும், பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடைபெற இருந்தது. இதனையடுத்து அந்த வீதி உலாவின்போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்திலிருந்து பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனர். பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக்அலி (36) மற்றும் ஊழியர் சஞ்சீவி (55) ஆகியோர், கோயில் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வந்து சாமி ஊர்வலத்தின்போது வெடிப்பதற்காக காலியான இடத்தில் பட்டாசுகளை வைத்திருந்தனர்.

அப்போது அதிலிருந்த பட்டாசு ஒன்றை எடுத்து அஜாக்கிரதையாக ஒருசிலர் வெடித்தபோது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டது. இதில் அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலிக்கு இடது கால் துண்டானது. ஊழியர் சஞ்சீவிக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விபத்தில் காயமடைந்த சாதிக்அலி, சஞ்சீவி ஆகிய இருவரையும் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அருசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் ஒருவருக்கு கால் துண்டானது மேலும் ஒருவருக்கு பலத்த தீக்காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,annual festival ,Mariamman ,Polivakkam village ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...