வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (3ம் தேதி) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 4ம் தேதி (செவ்வாய்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வரும் 5ம் தேதி (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90% வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>