ஜெயக்குமார், காமராஜ், பெஞ்சமின், பாண்டியராஜன், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் தோல்வி முகம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், பெஞ்சமின், பாண்டியராஜன், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர். தமிழகத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 2 சுற்றுகள் முடிவுகள் வெளியாகியது. இதில் சென்னை ராயபுரத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் 703 ஓட்டுகள் பின்தங்கி உள்ளார். அதேபோன்று விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 4,216 வாக்குகள் பெற்று முதல் சுற்றில் தோல்வி முகத்தில் உள்ளார்.

2வது சுற்றில் முன்னிலை வகித்தார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 4,500 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் பின்தங்கியுள்ளார்.

அதேபோன்று ஆவடி தொகுதியில் போட்டியிட்ட தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் 3,364 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடையும் நிலையில் உள்ளார். நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, திருச்சி (கிழக்கு) தொகுதி வேட்பாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர்.

ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி முகத்தில் உள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தோல்வி முகத்தில் உள்ளார். 2வது சுற்றில் போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்தங்கி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 3வது சுற்றில் ஓபிஎஸ் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்களாக சின்னையா (தாம்பரம்), வளர்மதி (ஆலந்தூர்) ஆகியோர் தோல்வி முகத்தில் உள்ளனர்.

பாஜ வேட்பாளர் குஷ்பு (ஆயிரம்விளக்கு), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் (திருவொற்றியூர்), அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் (கோவில்பட்டி) ஆகியோரும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர். ஆனாலும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் வாக்கு வித்தியாசம் மாறும் நிலை உள்ளது.

Related Stories:

More
>