×

உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்களுக்கு வெற்றி!: உழைக்கும் பத்திரிகையாளார்களை கோவிட் முன்கள பணியாளர்களாக ஒடிசா முதல்வர் அறிவிப்பு..!!

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,  ஒடிசா போன்ற தொற்று குறைவாக காணப்பட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் தற்போது வீரியமடைந்துள்ளது. ஒடிசாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,000 - ஐ கடந்துள்ளது. 


வைரஸ் பரவலின் வேகத்தை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, மே 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை எதிர்கொள்ள முன்கள பணியாளர்களே அரசுக்கு பெரிதும் துணை புரிகின்றனர். இதில் பத்திரிகையாளர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில், உழைக்கும் பத்திரிகையாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உழைக்கும் பத்திரிகையாளர்கள் தடையின்றி செய்திகளை வழங்குகின்றனர். 


தொடர்ந்து, கொரோனா தொடர்பான பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், கொரோனாவுக்கு எதிரான போருக்கு அவர்கள் பெரும் ஆதரவாக இருப்பதன் மூலமும்,  அரசுக்கு சிறந்த சேவையை செய்கிறார்கள் என முதல்வர் கூறி உள்ளார். ஒடிசா முதல்வரின் இந்த அறிவிப்பால், மாநிலத்தின் 6944 பத்திரிகையாளர்கள் பயனடைவார்கள். 


கோபபந்து சம்பாடிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6944 உழைக்கும் பத்திரிகையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் சுகாதார காப்பீடு கிடைக்கும்.  இதுதவிர, கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 



Tags : Odisha ,Chief Minister , Journalist, Govt Front Staff, Odisha Chief Minister Naveen Patnaik
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...