×

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ரூ.5 ஆயிரம் கொடுத்து ஆசிட் வீச வைத்த பெண்: 4 பேர் கைது

குலசேகரம்: கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆள் வைத்து ஆசிட் வீச வைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த மாடத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் லதா (46). சித்திரங்கோடு பகுதியில் மாவுமில் நடத்தி வருகிறார். கணவர் பிரிந்து சென்று விட்டார். மகன் சுபாஷ், ராணுவ வீரராக உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் ரைஸ் மில்லை மூடிவிட்டு பஸ்சில் உண்ணியூர்கோணம் சந்திப்பில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் லதா மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பினர். காயமடைந்த லதா குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக திருவட்டாரை அடுத்த முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருபைதாஸ் (52), செங்கோடி மத்திவிளையை சேர்ந்த ஜெஸ்டின் ராபின் (39), அதே பகுதியை சேர்ந்த சாஜின் (23), கல்லங்குழியை சேர்ந்த அர்ஜூன்குமார் (24) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். லதா பல லட்சம் கடன் குறித்து உறவினரான ஜெஸ்டின் கிருபை தாசிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ஜெஸ்டின் கிருபை தாஸ், ஜெஸ்டின் ராபினிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்து, செலவுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று லதா கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தபோது 2 பைக்குகளில் பின் தொடர்ந்து சென்று கிருபை தாஸ் கொடுத்த தண்ணீர் கலந்த ஆசிட்டை வீசியுள்ளனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த நாடகம் வெளி வந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் லதாவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

The post கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ரூ.5 ஆயிரம் கொடுத்து ஆசிட் வீச வைத்த பெண்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Dinakaran ,
× RELATED குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை