நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லா 30 மணி நேர முழு ஊரடங்கு துவங்கியது

நெல்லை : கொரோனா பரவலை தடுப்பதற்கான தளர்வில்லா 30 மணிநேர முழு ஊரடங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு 10 மணிக்கு துவங்கியது. போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் மாவட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனிடையே இன்று மேற்கொள்ளப்படும் வாக்கு எண்ணிக்கையின் போதும் பொதுமக்கள் வெளியேவர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 நம் நாட்டில் கொரோனா 2வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. வடமாநிலங்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொடுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட கொரோனா பரவலைவிட தற்போது அதிகமாக உள்ளது.

 இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த வாரம் முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும்  இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்தவாரம் 30 மணி நேர ஊரடங்கு அமலில் இருந்தது.

 தற்போது 2வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று (2ம் தேதி) அமல்படுத்தப்படுகிறது. இதன்படி இந்த ஊரடங்கு நேற்று இரவு 10 மணிக்கே துவங்கியது. நாளை (3ம் ேததி) அதிகாலை 4 மணி வரை 30 மணி நேரம் தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் இருக்கும். 30 மணி நேரமும் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். ஊரடங்கின் போது அத்யாவசிய தேவைகளான மருத்துவம், பால், பத்திரிகை, ஆம்புலன்ஸ் சேவை போன்றவைகள் இயங்கும்.

அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறைச்சி, மீன் விற்பனை கடைகள் நேற்றே மூடப்பட்டன. ஏற்கனவே அறிவித்தபடி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வர்த்தக நிறுவனங்களும் கடந்த திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஊரடங்கு நேரத்தில் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் கட்சியினர் வெளியே வந்து பட்டாசு வெடிக்கவும், வெற்றி கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதை கண்காணிக்க முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க உள்ளனர். ஊரடங்கு அமலுக்கு வருவதால் வெளியூர்களில் பணி செய்வோர் நேற்று காலையே பஸ்கள் மற்றும் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.  இதனால் சில வழித்தட பஸ்களில் கூட்டம் காணப்பட்டது.

Related Stories:

>