×

பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர்கள் 3 பேரையும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது: கலாஷேத்ரா இயக்குநருக்கு மகளிர் ஆணைய தலைவர் உத்தரவு; மாணவிகள் இ-மெயிலில் புகார் அளிக்கலாம்

சென்னை: ‘பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 3 ஆசிரியர்களை, கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது’ என்று கலாஷேத்ரா இயக்குநர் ரேவதிக்கு, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கலாஷேத்ராவில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி முன்னிலையில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமசந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டுப் புகார் குழு (ஐசிசி கமிட்டி) உறுப்பினர் உமாமகேஸ்வரி ஆகியோர் சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று ஆஜராகினர். அப்போது கல்லூரி மாணவிகள், பேராசிரியர் உட்பட 4 பேர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 40 நிமிடங்கள் விளக்கமும், அதற்கான அறிக்கையையும் ஆணைய தலைவர் குமாரியிடம், கல்லூரி தரப்பில் அளிக்கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் விசாரணைக்கு சென்ற போது இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இல்லை. எனவே, இன்று நேரில் விளக்கம் கேட்க அழைத்திருந்தோம். அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று கூறினர். கலாஷேத்ரா கட்டமைப்பு குறித்தும் அங்கு படிக்கக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கி உள்ளோம். அந்த மாணவிகள் தேர்வு எழுத வேண்டும். அவர்கள் ஆப்லைன் வழியாக தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் அதையும் இயக்குநரிடம் தெரிவித்துள்ளோம். மாணவிகள் யாரும் இதுவரை பாலியல் தொடர்பான புகார்களை கொடுக்கவில்லை. தற்போது, ஐசிசி கமிட்டியின் உள்ளீட்டு புகார் குழு அறிக்கையை கேட்டுள்ளோம்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற 3 பேரை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். ஐசிசி கமிட்டியை வலுப்படுத்தவும், அடுத்து வரக்கூடிய மாணவிகளுக்கு இந்த கமிட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவிகள், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். ஐசிசி கமிட்டியின் அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம். அதன் பிறகு இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும். தேர்வு குறித்து மாணவிகளுக்கு சர்குலர் அனுப்பப்படும் என்று இயக்குநர் கூறினார். மேலும் புகார்களை தெரிவிக்க சம்பந்தப்பட்ட ஆணையத்தின் இ-மெயில் மற்றும் தொலைபேசி எண்களையும் மாணவிகளுக்கு கொடுத்துள்ளோம். அதன்படி பாதிப்புக்குள்ளான மாணவிகள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர்கள் 3 பேரையும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது: கலாஷேத்ரா இயக்குநருக்கு மகளிர் ஆணைய தலைவர் உத்தரவு; மாணவிகள் இ-மெயிலில் புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : commission ,Kalashetra ,CHENNAI ,Revathi ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...