×

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் தினசரி 1.5 லட்சம் பயணிகளை கையாளும் கட்டமைப்பு வசதி: இறுதிகட்ட பணி விறுவிறு

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இங்கு தினசரி 1.5 லட்சம் பயணிகளை கையாளும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது.

புதிய பஸ்நிலைய பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய பஸ்நிலைய பணி வேகமாக நடந்து வருகின்றன. தினசரி 1.5 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. பஸ் நிலைய பணிகள் முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. இந்த பணியும் சில நாட்களில் முடிந்துவிடும். மேலும் பயணிகள் காத்திருப்பு கூடத்தில் தரைதளம் அமைக்கும் பணியும் நாற்காலிகள் அமைக்கும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது. கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் உள்ளே நுழைய 2 வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் முன்பக்கமும், மாநகர பஸ்கள் பின்புறம் வழியாக செல்ல தனி நுழைவாயில்கள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக பஸ் நிலையத்தின் பின்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அய்யஞ்சேரி சாலை சீரமைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ்நிலைய பின்புறம் உள்ள அய்யஞ்சேரி, மீனாதிபுரம் பகுதியில் குறுகிய சாலையில் குடியிருப்புகளும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இணைக்கும் புதிய பஸ் நிலையமாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ரயில் இணைப்பை ஏற்படுத்த, அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

திருவள்ளூருக்கு நகர பஸ்களை படப்பை மேம்பாலம் மற்றும் மதுரவாயல் வழியாக இயக்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக சி.எம்.டி.ஏ. மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளதால், விரைவில் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • மெட்ரோவுக்கு இடம் தேர்வு
    மீனம்பாக்கம் விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இணைக்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடையே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.4,080 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் கட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் எதிரே இடம் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • ஆம்னி பஸ்சுக்கு தனி இடம்
    புதிய பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு தனி பஸ்நிறுத்தம் கிடையாது. எனவே ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ்நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக வண்டலூர் வெளிவட்ட சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரதராஜபுரம் ஏற்றஇடமாக இருக்கும் என்று அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். அடுத்தகட்டமாக இங்கு ஆம்னி பஸ்நிலையம் கட்டும் பணி நடைபெறும் என்று தெரிகிறது.

The post கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் தினசரி 1.5 லட்சம் பயணிகளை கையாளும் கட்டமைப்பு வசதி: இறுதிகட்ட பணி விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,station ,CHENNAI ,Klampakkam ,
× RELATED கிளாம்பாக்கம் புதிய காவல்...