×

அரூர் அருகே ஆக்ரோஷமாக மோதி கொண்ட காட்டெருதுகள்-ஆண் எருது பலி

அரூர்: அரூர் அருகே கோட்டப்பட்டியில் காட்டெருதுகள் முட்டி மோதிக்கொண்டதில், ஆண் காட்டெருது பரிதாபமாக உயிரிழந்தது.
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு, காட்டெருதுகள் மற்றும் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன.

கோட்டப்பட்டி அருகே குழுமிநத்தம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு காட்டெருதுகள் கடுமையாக மோதிக்கொண்டன. அப்போது, அந்த காட்டெருதுகள் பயங்கரமாக சத்தமிட்டுள்ளன. இதனால், அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், கோட்டப்பட்டி வனச்சரகர் குமரவேலு மற்றும் வனக்காவலர்கள் வெங்கடராமன், செல்லமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதற்குள் காட்டெருதுகளின் மோதல் முடிவுக்கு வந்திருந்தது. இதில், பலமாக அடிபட்டதில் 10வயது கொண்ட ஒரு ஆண் காட்டெருது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்டல இயக்குநர் இளங்கோ உத்தரவின்பேரில், உதவி இயக்குநர் வில்வம், கால்நடை மருத்துவர் கணேஷ் ஆகியோர் விரைந்து சென்று சிகிச்சையளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காட்டெருது பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, அங்கேயே பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. காட்டெருதுகள் மோதிக்கொண்டதில், ஒரு காட்டெருது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arur , Arur: A male wildebeest was tragically killed in a head-on collision at Kottapatti near Aroor.
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி