×

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட தகவலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை: கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி

சென்னை: ‘‘ மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி-வினா பயிலரங்கம் நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற 152 மாணவர்கள், மாநில அளவில் நடத்தப்படும் மெய்யறிவு கொண்டாட்டம் என்ற வினாடி-வினா பயிலரங்குக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த விழாவை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘தேன்சிட்டு’ என்ற சிறார்களுக்கான இதழை நடத்தி வருகிறது. அந்த இதழ்களில் வெளியான படைப்புகள் சார்ந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களில் 152 பேர் மாநில அளவில் நடத்தப்படும் இந்த மெய்யறிவு கொண்டாட்டம் என்ற பயிலரங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 8ம் தேதி வரை இந்த பயிலரங்கில் பங்கேற்று பல்வேறு வல்லுநர்களுடன் கலந்துரையாட இருக்கின்றனர். இது அரசுப் பள்ளி மாணவ மாணவியரை கற்றலின் அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 5ம் தேதி வெளியாகும். அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு அவற்றை வெளியில் விட்டவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

The post அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட தகவலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை: கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி appeared first on Dinakaran.

Tags : Education Minister ,Mahesh Poiyamozhi ,Chennai ,
× RELATED திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்