×

மேல்முறையீடு மீதான விசாரணை முடியும் வரை ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன்: 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய மனு வரும் 13ல் விசாரணை

சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு மீதான விசாரணை முடியும் வரை அவருக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறை தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய விவகாரத்தில் வரும் 13ம் தேதி விசாரணை தொடங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘எப்படி எல்லா திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளனர்?’ என கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் மோடி சமூகத்தினரை அவர் அவமதித்ததாக, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எம்பி பதவி பறிக்கப்படும். அதன்படி, அடுத்த நாளே ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 30 நாள் ஜாமீன் வழங்கியிருந்தது. சிறை தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ராகுல் தனது சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ராகுல் நேற்று டெல்லியிலிருந்து சூரத்துக்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் பலர் உடன் சென்றனர்.

சூரத் விமான நிலையத்தில் இருந்து சொகுசு பஸ்சில் ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். ராகுல் சார்பில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும், ஜாமீனை நீட்டிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிற்பகல் 3 மணிக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி.மொகேரா முன்னிலையில் மனு விசாரிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். ராகுலின் மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ₹15,000 பிணையில் மேல்முறையீடு முடிவடையும் வரை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான மனுவை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வரும் 10ம் தேதிக்குள் இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதாக ராகுலின் வழக்கறிஞர் கிரித் பன்வாலா கூறி உள்ளார்.

இந்த வழக்கில் குஜராத் அரசும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையையும் நீதிபதி அனுமதித்தார். ராகுல் வருகையையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே, ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவிலிருந்து சூரத் நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் வந்த வாகனங்களை குஜராத் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  • உண்மையே என் ஆயுதம்
    நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ராகுல் தனது டிவிட்டரில், ‘இது ஜனநாயகத்தை காப்பாற்ற, ‘நண்பர்கள் காலத்திற்கு’ எதிரான போராட்டம். இந்த போராட்டத்தில் உண்மையே என் ஆயுதம், உண்மையே என் ஆதரவு. நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்’ என கூறி உள்ளார். ஒன்றிய பாஜ அரசு, அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி, ‘நண்பர்கள் காலம்’ (இந்தியில் மித்ரகால்) என ராகுல் கேலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post மேல்முறையீடு மீதான விசாரணை முடியும் வரை ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன்: 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய மனு வரும் 13ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Surat court ,Rahul ,Surat ,Rahul Gandhi ,Surat Sessions Court ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…