×

எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஊழல்வாதிகள் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஐக்கு பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் எந்த தயக்கமும் இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சிபிஐக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான சிபிஐ தொடங்கப்பட்டு, 60ம் ஆண்டு வைர விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: ஜனநாயகம் மற்றும் நீதிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பதே சிபிஐ அமைப்பின் முக்கிய பொறுப்பு. பல ஆண்டுகளாக ஊழலால் பயனடைந்தவர்கள் விசாரணை அமைப்புகளை தாக்கும் சூழலை உருவாக்கியுள்ளனர். இந்த நபர்கள் உங்களை (சிபிஐ) திசைதிருப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது.

நமது முயற்சிகளில் தொய்வு இருக்கக் கூடாது. இது நாட்டின் விருப்பம், நாட்டு மக்களின் விருப்பம். நாடும், சட்டமும், அரசியலமைப்பும் உங்களுடன் உள்ளன. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசியல் மன உறுதிக்கு இன்று பஞ்சமில்லை. எனவே, ஊழல்வாதிகள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், அதிகாரிகள் எந்த தயக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதார சக்தி வளர்ந்து வரும் அதே நேரத்தில் தடைகளை உருவாக்குபவர்களும் உயர்ந்து வருகின்றனர். இதற்காக ஊழல் பணம் செலவிடப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஊழலின் பாரம்பரியத்தை பெற்றது. அதை அகற்றுவதற்குப் பதிலாக, சிலர் இந்த நோயை வளர்த்து வருகின்றனர். ஊழலில் யார் புதிய சாதனை படைப்பார்கள் என்ற போட்டி நடந்து வந்தது. ரேஷன், வீடு, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் என அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவிகளையும் கொள்ளையடிக்கும் அளவுக்கு ஊழல்வாதிகள் சென்றார்கள். ஏழைகளுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 15 பைசா மட்டுமே சரியாக சென்று சேர்கிறது என்று ஒரு பிரதமர் கூட ஒருமுறை கூறினார்.

இப்போது, ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மும்மூர்த்திகளால் பயனாளிகள் தங்கள் முழு உரிமையையும் பெறுகிறார்கள். நேரடி பணப்பரிமாற்றம் காரணமாக, சுமார் ரூ. 2.25 லட்சம் கோடி தவறானவர்கள் கைகளில் சிக்காமல் சேமிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு பாஜ அரசு பதவியேற்ற பிறகு ஊழல் மற்றும் பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டு, விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அங்கெல்லாம் இளைஞர்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பதில்லை. தகுதியின் மிகப்பெரிய எதிரி ஊழல். இது சுயநலம் மற்றும் வாரிசு ஆட்சிக்கு ஊக்கமளிக்கிறது. இதனால் நாடு பலவீனமடையும் போது, அது வளர்ச்சியை பாதிக்கிறது. ஊழல் என்பது ஒரு சிறிய குற்றம் மட்டுமல்ல. இது ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறது. பல குற்றவாளிகள் உருவாக வழிவகுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  • உண்மை, நீதியின் பிராண்ட் சிபிஐ
    பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘இன்றும் ஒரு வழக்கு தீர்க்கப்படாமல் இருக்கும்போது, அதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. சிபிஐ தனது பணி மற்றும் உத்திகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இது உண்மை மற்றும் நீதிக்கான ஒரு பிராண்ட் போன்றது. பஞ்சாயத்து மட்டத்தில் கூட, ஏதேனும் பெரிய குற்றம் நடந்தால், அதை சிபிஐக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’’ என்றார்.

The post எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஊழல்வாதிகள் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஐக்கு பிரதமர் மோடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,CBI ,New Delhi ,
× RELATED தமிழ்நாட்டின் கேள்விகளுக்கு பதில்...