தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்வதில் சிக்கல்: மாநிலத்தில் கட்டிட பணிகள் முடங்கும் அபாயம்

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு கடந்த 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து கட்டட தளங்களுக்கான கட்டுமான பொருட்களை கொண்டுசெல்வது கடினமான பணியாகிவிட்டது. பல்வேறு இடங்களில் உள்ள கட்டுமான தளங்களுக்கு லாரிகள் மூலம் 24 மணி நேரத்தில் 2 மணி நேரம் மட்டுமே பொருட்களை கொண்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர எல்லைக்குள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்களின் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போது கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கட்டுப்பாடு புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் குறைந்து வருகிறது. கட்டுமான பொருட்களை கொண்டும் செல்லும் வாகனங்கள் இரவு ஊரடங்கு உத்தரவின் போது அதிகாலை 4 மணி வரை நகரங்களின் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. பிறகு 2 மணிநேரத்தில் பொருட்களை கட்டுமான தளங்களுக்கு வழங்குவதற்காக விரைந்து வந்து விட்டு, காலை 6 மணிக்கு முன்னதாக நகர எல்லைகளை விட்டு வெளியேறுகின்றன. சென்னையில் சுமார் 1,500 லாரிகள் கட்டுமான பொருட்களை கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர் கூறியதாவது: கனரக வாகனங்கள் நகர எல்லைக்குள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுவதால், அனைத்து கட்டுமான திட்டங்களிலும் 70% முதல் 80% வரையில் இரவு நேரங்களில் தான் கட்டுமான பொருட்கள் வழங்கப்படுகிறது. தொடந்து நடைபெற்று வரும் கட்டுமான பணிகளால் அங்குள்ள கட்டுமான பொருட்கள் தீர்ந்து போகின்றன. இரவு நேர ஊரடங்கின் காரணமாக உடனடியாக கட்டுமான பொருட்களை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனால் இன்று முதல் புதிதாக ஒப்பந்தம் கிடைப்பது தொடர்பான சிக்கலை நாங்கள் சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக மனல் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘இரவு நேரத்தில் பலமுறை கட்டுமான பொருட்களை லாரிகள் கொண்டு செல்வது வழக்கம். தற்போது இரண்டு மணி நேரத்தில் ஒருமுறை மட்டுமே பொருட்களை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசிடம் விவாதித்தோம். அப்போது இரவு ஊரடங்கில் கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்லும் லாரிகளுக்கு தளர்வு வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்’ என்றனர்.

மேலும் இதுதொடர்பாக நகர்புற மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கட்டுமான தளவாடங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதால் கட்டுமான பணிகளிலும் தாதம் ஏற்படும். மாநில அரசிடம் இந்த பிரச்னையை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்’ என்றார்.

Related Stories:

>