×

தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் சென்னை குடிநீர் தேவைக்காக தர வேண்டிய 12 டிஎம்சியில் 4.4 டிஎம்சி ஆந்திரா பாக்கி: நடப்பாண்டிலும் முழு நீரை பெற முடியவில்லை; பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி சென்னை குடிநீர் தேவைக்காக தர வேண்டிய 12 டிஎம்சியில் 4.4 டிஎம்சி ஆந்திரா பாக்கி வைத்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் ஆந்திர அரசு தர வேண்டும். இந்நிலையில் ெசன்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியதால், மாநகர மக்களின் குடிநீர் தேவையை ஒரளவு பூர்த்தி செய்ய முடிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவான நிலையில், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கிருஷ்ணா நதி நீர் தேவைப்படவில்லை.

இந்த சூழலில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி கடிதம் ஒன்றை ஆந்திர நீர்வளத்துறைக்கு எழுதியது. அதில், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் போதும். அப்போதும் மீதம் தர வேண்டிய 4 டிஎம்சி நீரை தர வேண்டும் என்று அதில் கூறியுள்ளது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை ஆந்திர அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறைத்தனர். இந்த நிலையில், சென்னை மாநகரின் குடிநீருக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வருவதன் காரணமாக 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி நீர் மட்டம் 1220 மில்லியன் கன அடியாக குறைந்தது.

இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தற்போது வரை 7.65 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தண்ணீர் தரப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள டிஎம்சியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணா கால்வாய்களில் சேதமடைந்த இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், பொதுப்பணித்துறை தண்ணீர் பெற முயற்சிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கமாக நடப்பாண்டு தவணைக்காலம் நேற்றுமுன்தினத்துடன் முடிந்தது. இதனால், 12 டிஎம்சியில் 4.4 டிஎம்சி நீரை ஆந்திரா பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,TMC Andhra Pradesh , Of the 12 TMCs required to supply Chennai drinking water annually as per the Telugu Ganga project agreement, 4.4 TMC Andhra Pradesh: Could not get full water at present; Public Service Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...