×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட முன்னாள்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி: கருத்துக்கணிப்பு முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமையும். கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசு தோல்வி அடைந்துள்ளன.

18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தில் அரசு முழு தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது அலை தீவிரமாக பரவக் காரணம் மத்திய அரசின் அலட்சியம்தான். கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் குறித்து அரசு தெரிவிக்கும் கணக்குகள் பொய். இந்த வேறுபாட்டை பார்த்தால் அரசு தெரிவிக்கும் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு அதிக உயிர் இழப்புகள் இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு என தேவையான நிதியை மத்திய அரசு கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு தர வேண்டும். தமிழகத்தில் வரும் ஆட்சி மாற்றம் மத்தியில் எதிரொலிக்கும். 2019ல் ஆட்சி மாற்றம் வந்து இருக்க வேண்டும். மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : P. Chidambaram , Central and state governments fail in corona prevention measures: P. Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி