கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாத யானை வழித்தடத்தில் செயல்படும் செங்கல் சூளை அகற்ற நடவடிக்கை: மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகளை அகற்றுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அமைந்துள்ள உரிமம் இல்லாத செங்கல் சூளைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், கோவை கலெக்டருக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, தடாகம் உள்ளிட்ட யானைகள் வழித்தடங்களை ஆய்வு செய்த கோவை வடக்கு தாசில்தார் அனுமதி இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து அதன் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், சிங்காரவேலன் உள்ளிட்டோர் ஆஜராகி, தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட கலெக்டருக்கு தான் அதிகாரம் உள்ளது, தாசில்தாருக்கு அதிகாரமில்லை. உரிமங்களை புதுப்பிக்க உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்த போதும், அவற்றை கிடப்பில் போட்டு விட்டு, சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, கலெக்டரின் அறிவுறுத்தலின்படிதான் தாசில்தாரர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு வருமாறு: யானை இந்தியாவின் பாரம்பரிய மிருகம். ஒவ்வொரு ஆண்டும் 350 முதல் 500 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு யானைகள் இடம் மாறக்கூடியவை. இந்தியாவில் 101 யானை வழித்தடங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதில் தென்னிந்தியாவில் மட்டும் 28 வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களை யானைகள் 93 சதவீதம் பயன்படுத்துகின்றன. எனவே, யானை வழித்தடங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.

தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட கலெக்டருக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே, கோவை வடக்கு தாசில்தார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், சட்டப்படி அதிகாரம் உள்ள கலெக்டர், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். உரிமம் இல்லாத செங்கல் சூளைகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>