×

ஐயா... வேணாம்ய்யா... இங்கிலாந்தில் நீரவ் மோடி மேல்முறையீடு

புதுடெல்லி: இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றன. நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றதை அடுத்து, அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 15ம் தேதி, நீரவ் மோடியை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சரும் கையெழுத்திட்டார். இதனால், எந்நேரமும் நீரவ் மோடி நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நீரவ் மோடி தரப்பில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அவரை நாடு கடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, நாடு கடத்தப்படுவதை தவிர்க்க இங்கிலாந்தில் தொடர்ந்து அகதியாக வாழ நீரவ் மோடி விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags : Neerav Modi ,UK , Sir ... No ... Neerav Modi appeals in UK
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது