நள்ளிரவில் மருத்துவமனையில் தீ 16 கொரோனா நோயாளிகள் பலி: 2 நர்சுகள் உயிரிழந்த பரிதாபம் குஜராத்தில் மீண்டும் பயங்கரம்

காந்தி நகர்: குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள், 2 செவிலியர்கள் பரிதாபமாக பலியாகினர். குஜராத் மாநிலம், பரூச்சில் உள்ள மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் கொரோனா வார்டில்  திடீரென தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவிய கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அவசர சிகிச்சை பிரிவிலும் பரவியது. அங்கிருந்த நோயாளிகள் அலறி கூச்சலிட்டனர்.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தது. இதனிடையே, அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் நோயாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அங்கு 12 தீயணைப்பு துறை வாகனங்கள் விரைந்து வந்தன. அதில் இருந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக 40 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 நோயாளிகளில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், 16 நோயாளிகள், 2 நர்சுகள் என மொத்தம் 18 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘பரூச் மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார். இறந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

* இது 5வது விபத்து

குஜராத்தில் கடந்தாண்டில் இருந்து இதுவரையில் 5 கொரோனா மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத், வதோதரா, ராஜ்காட், ஜாம்நகரில் உள்ள மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏராளமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>