×

தீ விபத்து எதிரொலியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு

சென்னை: தீ விபத்து எதிரொலியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். எல்.ஐ.சி. கட்டடத்தில் தீத்தடுப்பு வசதிகள் முழுமையாக இல்லை என மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பேட்டி அளித்துள்ளார். 14 மாடி எல். .ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்த பெயர் பலகையில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஆய்வு மேற்கொண்டனர் . தரைத் தளம் உள்ளிட்ட சில இடங்களில் தீத்தடுப்பு வசதிகளில் குறைகள் இருந்ததை சுட்டிக் காட்டினோம் என்று அதிகாரி பேட்டி அளித்துள்ளார். தீத்தடுப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்த சில அறிவுரைகளை வழங்கி உள்ளோம் என்று தீயணைப்புத்துறை அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, எல்ஐசி கட்டிடத்தின் 14வது மாடியின் மேல் தளத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக இன்று வரை 14 மாடி கொண்ட எல்ஐசி கட்டிடம் உள்ளது. ‘லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவன, தென்னிந்திய தலைமை அலுவலகமாக இந்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. 177 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடமானது, கடந்த 1953ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1959ம் ஆண்டு 14 மாடி கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 70 ஆண்டுகள் வரலாற்று மிக்க இந்த கட்டிடமானது. இன்று வரை சென்னை அண்ணாசாலையில் கம்பீரமான தோற்றத்துடன் உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5.55 மணி அளவில் எல்ஐசி கட்டிடத்தின் 14வது மாடியின் மேல் தளத்தில் திடீரென கரும்புகை எழுந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் கரும் புகையுடன் தீ குபு குபுவென பரவியது. இதை வாகன ஓட்டிகள் பார்த்து உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி திருவல்லிக்கேணி, எழும்பூர், தேனாம்பேட்டை பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கட்டிடத்தின் மொட்டை மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால், எழும்பூர் தீயணைப்பு நிலையம் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து பிரமாண்டமான 2 ‘ஸ்கை லிப்ட்’வாகனம் கொண்டு வரப்பட்டது. அப்போது தீ மிக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. மேலும், தீ மொட்டை மாடியில் இருந்து 14வது தளத்திற்கு பரவும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு முதலில் எல்ஐசி கட்டிடத்தின் மின் இணைப்பை உடனே துண்டித்தனர். 20 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் பட்டிக்கட்டுக்கள் வழியாக மொட்டை மாடிக்கு சென்றனர். பிறகு ஸ்கை லிப்ட் உதவியுடன் 3 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு லிப்ட் மூலம் சென்று பார்த்த போது, எல்ஐசி என்று பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் பீச்சி அரை மணி நேரம் போராடி தீணை அணைத்தனர். மேலும், 14வது மாடிக்கு தீ பரவாமலும் தடுக்கப்பட்டது. அதேநேரம், நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் அலுவலக ஊழியர்கள் யாரும் அலுவலக கட்டிடத்தில் இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, வழக்கமாக மாலை நேரங்களில் கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள எல்ஐசி விளம்பர பலகைக்கான விளக்குகள் போடப்படும். அதன்படி கட்டிடத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் விளம்பர பலகைக்கான விளக்குகளை போட்டுள்ளனர். பிறகு சிறிது நேரத்தில் கட்டிடத்தின் மேல் தளத்தில் வடக்கு நோக்கி அமைக்கப்பட்ட பெயர் பலகை மட்டும் மின் கவுசி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து எதிரொலியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். எல்.ஐ.சி. கட்டடத்தில் தீத்தடுப்பு வசதிகள் முழுமையாக இல்லை என மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பேட்டி அளித்துள்ளார்

The post தீ விபத்து எதிரொலியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : LIC ,Annasalai, Chennai ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கல்லுவிளை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எல்ஐசி வாகனம்