மின்வாரிய பணியாளர்களை முன்கள பணியாளராக அறிவிக்க தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை வெகுவேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. தமிழக அரசு அறிவித்துள்ள பட்டியலில் முன்கள பணியாளர்களாக, மின்வாரிய பணியாளர்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கவும், இந்த கொரோனா தொற்று காலத்தில் மின்தடையை சரிசெய்து தடையில்லாத மின்விநியோகத்தை மின்வாரிய பணியாளர்கள் செய்து வருகிறோம்.

அதேபோல் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் வீடுகளிலும் மின் அளவீடு செய்து கணக்கீடு செய்து வருகிறோம். இவ்வாறு நுகர்வோருடன் பணியாற்றும் மின்வாரிய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அங்கீகரிக்க மறுப்பது கவலை கொள்ள செய்கிறது. பணி செய்கின்ற ஊழியர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது. இந்த இரண்டாம் அலையில் கூட மின்வாரிய பணியாளர்கள் பாதிக்கப்பட்டு அதில் சிலர் மரணத்தை தழுவி விட்டனர். எனவே மின்வாரிய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும்.

Related Stories:

>